உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் எ.வ.வேலு ஆவேச பிரச்சாரம் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என குற்றச்சாட்டு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 13 April 2026

உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் எ.வ.வேலு ஆவேச பிரச்சாரம் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என குற்றச்சாட்டு.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேலுவை ஆதரித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் கொள்கைகளே முக்கிய காரணம் என கடுமையாக குற்றம்சாட்டினார். மாநில அரசு நிர்ணயிக்க வேண்டிய வரிகளை, மத்திய அரசு நிர்ணயிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அனுமதி அளித்து கையெழுத்திட்டதால்தான் இன்று விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது மாநில அரசுக்கு தெரியும். வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு பாலுக்கும் பருப்புக்கும் எவ்வளவு தீ வைக்க வேண்டும் என்பது தெரிந்ததுபோல், அரசுக்கும் பொருள்களுக்கு சரியான வரி நிர்ணயம் செய்யும் திறன் உள்ளது. ஆனால் அந்த அதிகாரம் மத்திய அரசிடம் சென்றுவிட்டதால் தான் இன்று அனைத்து பொருட்களும் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என்றார்.


தொடர்ந்து, ஜிஎஸ்டி முறையை எடுத்துக்காட்டிய அவர், மாநிலங்களுக்கு வரி விதிக்கும் முழு அதிகாரம் இருந்திருந்தால் ஜிஎஸ்டியை ஏற்கவே முடியாது. அந்த அதிகாரம் பறிக்கப்பட்டதால் தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விமர்சித்தார்.


எரிவாயு சிலிண்டர் விலை உயர்வையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுக–காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தது. இன்று அது ரூ.1050 ஆக உயர்ந்துள்ளது. இந்த ரூ.650 உயர்வுக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினார்.


மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் மானியங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம், பிற மாநிலங்களின் அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கு வழங்கப்படவில்லை. கல்விக்கான ரூ.3,200 கோடி மானியம் வழங்கியிருந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியும், பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டியும் இருப்போம் என்றார்.


மேலும், இந்தியாவில் கல்வித் தரத்தில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் தடை செய்கிறது. இது நீதியற்றது எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறுவது சாதாரண தேர்தல் அல்ல இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான போராட்டம். டெல்லியை தோற்கடித்து தமிழ்நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad